×

சூளகிரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல் கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ தலைமையில் வியாபாரிகள் மனு

கிருஷ்ணகிரி, பிப்.18:  சூளகிரியில் தினசரி சந்தையை ஏலம் எடுத்த குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டி வசூலிப்பதாக கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ முருகன்., தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ முருகன் தலைமையில், சூளகிரியில் தினசரி சந்தையில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரியில் தினசரி சந்தை நடந்து வருகிறது. சந்தை வளாகத்தில் 42 கடைகள் மற்றும் காலி இடத்தில் திறந்தவெளி கடைகள் அமைத்து அரசு நிர்ணயம் செய்த சுங்க வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சுங்க வரி வசூல் செய்ய நடந்த ஏலத்தில் அதிமுகவை சேர்ந்த ராஜாராம் என்பவரது மனைவி சரஸ்வதி ஏலம் எடுத்தார்.

தற்போது ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர், அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக சந்தை தெருவிலும், நடைபாதையிலும், தள்ளு வண்டி வியாபாரிகளிடமும் ₹ஒரு லட்சம் அட்வான்ஸ் மற்றும் தினமும் ₹200 சுங்கம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வசூல் செய்கிறார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது சந்தையை ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர் சரவஸ்வதியின் குத்தகையை ரத்து செய்து, சாதாரண வியாபாரிகள் பயனடையும் வகையில் ஏலம் விடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷேக்ரசீத், மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்புசேகர் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : MLA ,DMK ,Collector ,
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...