×

ஏழை எளியோருக்கா... பள்ளி மாணவர்களுக்கா? சத்துணவு வழங்குவது யாருக்கு?

திண்டுக்கல், பிப். 18:முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஏழை எளியவர்களுக்கும், ரிக்ஷா வண்டி இழுப்பவர்களுக்கும் சத்துணவு வழங்கினர். அதனை எடப்பாடி அரசும் செய்து வருகிறது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டியது அதிமுகவினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து குழந்தைகள்,  ஏழை எளியவர்களுக்கு, ரிக்ஷா இழுப்பவர்களுக்கு வழங்கி வந்தனர். இதனை தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடியும் தொடர்ந்து செய்து வருகிறார்.

மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதி தான் சேர வேண்டும். சாதாரண கிராமத்தில் படித்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுவது மிகவும் கஷ்டம். எனவே நீட் தேர்வு எழுதியவர்களில்  பின்தங்கிய மாணவர்களுக்கு என 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது எடப்பாடி அரசு’’ என்றார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை ஏழை- எளியவருக்கும், ரிக்ஷா இழுப்பவருக்கும் முன்னாள் முதல்வர்கள் வழங்கியதாக கூறியதையும், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு கஷ்டம் என்பதை ஆளுங்கட்சி அமைச்சரே ஒப்புக் கொண்டதையும் எண்ணி விழாவிற்கு வந்த அதிமுகவினர் அதிருப்தியடைந்தனர்.

‘விலைவாசி உயர்ந்திருச்சு..தங்கம்னு பேரு வச்சுக்குங்க...’
கோபால்பட்டியில் நேற்று நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘இப்போது தங்கம் விற்கிற விலை உங்களுக்கு தெரியும். தங்கம், தங்கம்மா, தங்கராஜ் என பெயர் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். ஏனென்றால் அந்தளவிற்கு விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னென்ன செய்ய போகிறார்கள் என்று அன்றைக்கு தெரியும்’’ என்றார்.

Tags : poor ,school students ,
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...