பெட்ரோல் பங்க் திறக்க அனுமதி பெற்று தருவதாக லட்சங்களை சுருட்டும் மோசடி கும்பல் போலீசார் நடவடிக்கை பாயுமா?

கீழக்கரை, பிப்.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் தொழிலில் ஆர்வமுள்ள நபர்களை குறி வைத்து மர்ம கும்பல் ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் சோகன்லால். இவரிடம் பெட்ரோல் பங்க் வைக்க அனுமதி பெற்று தருகிறோம் என முன்னணி நிறுவனத்தின் பெயரை கூறி சிலர் ரூ.8.65 லட்சம் பணம் பெற்றனர். ஆனால் அனுமதி பெற்று தரவில்லை. இது குறித்து சோன்லால் ராமநாதபுரம் காவல்துறையில் புகார் அளித்தார்.இதேபோன்று சில வாரங்களுக்கு முன் ராமநாதபுரத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு வியாபாரியை, பிரபல நிறுவனத்தின் பெயரில் பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்பாடு தருவதாக கூறி சிலர் அணுகினர். அவர்களது பேச்சை கேட்டு விண்ணப்பிப்பதற்காக ரூ.10 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். பதிலுக்கு மோசடி கும்பல், பிரபல பெட்ரோல் நிறுவனத்தின் பெயரில் ஒப்புதல் சீட்டை அனுப்பினர். பின்னர் அனுமதி தருவதற்கு என சில லட்சங்களை கேட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த வியாபாரி அந்த துறை சார்ந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் வந்த கடிதம் போலியானது என தெரிய வந்தது.

இதனையடுத்து மேற்கொண்டு பணம் செலுத்தாமல் தப்பித்துக் கொண்டார். இவர் போன்று ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு புகார் அளிக்காமல் இருக்கின்றனர். இதனை பயன்படுத்தி அந்த கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. எனவே மோசடி குறித்து காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கீழக்கரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் துரை என்ற ஜமால் இப்ராஹிம் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தை குறி வைத்து மோசடி கும்பல் செயல்படுகிறது. இவர்கள் ஆன்லைனில் பெட்ரோல் பங்க் வைக்க அனுமதி பெற்று தருகிறோம் என சில மொபைல் எண்களை கொடுத்துள்ளனர். இதனை தொடர்பு கொள்ளும் வியாபாரிகளை ஏமாற்றுகின்றனர். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories:

More