வங்கி கடனுக்காக வீடு ஜப்தி குடும்பத்துடன் பரிதவிக்கும் விவசாயி

திருமங்கலம், பிப்.18: திருமங்கலம் அருகே விருசங்குளத்தை சேர்ந்தவர் சதிஷ்குமார். மனைவி ரோகிணி. இவர்களது முதல் மகள் 12ம் வகுப்பும், 2வது மகள் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சதீஷ்குமார் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2018ல் கால்நடை வாங்க மதுரை தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டி அசலை ஒரு ஆண்டாக செலுத்திய நிலையில், உடல்நலம் பாதிப்பால் சதிஷ்குமார் கடனை செலுத்த முடிய வில்லை. வாங்கிய மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழக்கவே சதிஷ்குமார் குடும்பம் வறுமையில் வாடத்துவங்கியது. இந்நிலையில் கொரோனாவால் கடந்த 8 மாதமாக வங்கியில் கடனை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமங்கலம் தாலுகா போலீசாருடன் சென்ற வங்கி அதிகாரிகள் சதீஷ்குமார் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் வீட்டின் வெளியே தங்கியுள்ளனர். சதிஷ்குமார் மனைவி ரோகிணி, ‘‘எங்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காமல் தனியார் வங்கி நிறுவனத்தினர் ஜப்தி செய்துள்ளனர். தற்போது தங்க கூட இடமின்றி வீட்டின் முன்பு வசித்து வருகிறோம். மகள்களின் பாடபுத்தகங்கள் கூட வீட்டிற்குள் சிக்கி கொண்டது. புத்தகம், சீருடை இல்லாததால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை என தெரிவித்தார்.

Related Stories:

>