×

10 அணிகள் பங்கேற்கும் 19வது சீசன் ஐபிஎல் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்: பெங்களூருவில் முதல் போட்டியில் ஆர்சிபி-சன்ரைசர்ஸ் மோதல்

 

பெங்களூரு: பிசிசிஐ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. உலகில் அதிக பிராண்ட் மதிப்பை கொண்ட தொடராக ஐபிஎல் உள்ளது.

19வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் ஆடுகிறது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கிறது. பிளே ஆப்பில் 2 குவாலிபயர், ஒரு எலிமினேட்டர், பைனல் என மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே 20 போட்டிகளுக்கான முதற்கட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எஞ்சிய 50 லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது.

பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், தர்மசாலா, ராய்ப்பூர் மற்றும் புது சண்டிகர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. வாரஇறுதி நாட்களில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. 2 போட்டிகள் நடைபெறும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணி தொடங்கும்.

ஒவ்வொரு அணியில் தங்கள் சொந்த ஊர்களில் 7 போட்டி, வெளியூர்களில் 7 போட்டியில் ஆடும். பஞ்சாப் தங்களது சொந்த மைதானப் போட்டிகளை புது சண்டிகர் மற்றும் தர்மசாலாவிலும், ராஜஸ்தான் 4 போட்டிகளை ஜெய்ப்பூரிலும், ஆர்சிபி 3 போட்டிகளை பெங்களூருவிலும், 2 போட்டிகளை ராய்ப்பூரிலும் ஆட உள்ளது. பிளேஆப் சுற்று அட்டவணை பின்னர் வெளியிடப்படும். மே 31ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முன்னாள் சாம்பியன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் கவுகாத்தியில் 30ம்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது.

இதேபோல் மும்பை இந்தியன்ஸ் நாளை மறுநாள் வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 31ம்தேதி சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ், ஏப்.1ம் தேதி லக்னோவில் டெல்லி கேபிட்டல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் தங்களது முதல் போட்டிகளில் ஆடுகின்றன. ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதால் அடுத்த 65 நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

Tags : 19th season ,IPL festival ,Kolagala ,RCP ,Sunrisers ,Bangalore ,IPL T20 ,BCCI ,Chennai Super Kings ,Mumbai Indians ,Royal Challengers Bangalore ,Sunrisers Hyderabad ,Kolkata Knight Riders ,Rajasthan Royals ,Delhi Capitals ,
× RELATED நாங்கள் விரும்பிய தொகுதிகள்...