டெஹ்ரான்: ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் பெரும் கதிர்வீச்சு ஆபத்து ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவ நடவடிக்கைகள் காரணமாக மோதல் முற்றியுள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த 17ம் தேதி ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்தின் அணு உலைக்கு மிக அருகில், அதாவது 350 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு கட்டிடம் ஏவுகணை வீச்சில் தகர்க்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 24ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, புஷெர் அணுமின் நிலைய வளாகத்திற்குள் இரண்டாவது முறையாக ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரஃபேல் மரியானோ குரோஸி விடுத்துள்ள அறிக்கையில், ‘புஷெர் அணுமின் நிலையப் பகுதியில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது வரை அணு உலைக்கு நேரடி பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், செயல்பாட்டில் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே தொடர்ந்து ஏவுகணைகள் விழுவது என்பது மிகப்பெரிய கதிர்வீச்சு விபத்துக்கு வழிவகுக்கும். இதன் விளைவுகள் ஈரான் நாட்டின் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளையும் பாதிக்கும்.
அணுசக்தி பாதுகாப்பிற்கான ஏழு முக்கிய தூண்களை இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இத்தகைய மிக நெருக்கமான ஆபத்துகள் பிராந்திய பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலாகும்’ என்று கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி அணு உலையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், ஊழியர்கள் காயமடையவில்லை என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிர்வீச்சு அளவு சீராக இருப்பதாகவும், மின் நிலையம் வழக்கம்போல இயங்கி வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
எனினும், நிலைமையைக் கண்காணிக்க அவசர கால மையத்தை குரோஸி முடுக்கிவிட்டுள்ளார். மேற்கண்ட இந்த அணுமின் நிலையத்தை உருவாக்க உதவிய ரஷ்யா, இந்த தாக்குதல்களை ‘பொறுப்பற்ற செயல்’ என்று கண்டித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ நிறுவன ஊழியர்களை வெளியேற்றும் மூன்றாவது கட்டப் பணிகளை அந்த நாடு தொடங்கியுள்ளது. இதனால் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடான்ஸ் போன்ற மற்ற உணர்திறன் மிக்க அணுசக்தி தளங்களும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
