×

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் 1.82 லட்சம் அபேஸ்: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

தாம்பரம்: வங்கியிலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 1.82 லட்சம் திருடிய ஆசாமியை போலீசார் தேடுகின்றனர். தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் கண்ணன்(73). ஓய்வுபெற்ற அரசு புற்றுநோய் மருத்துவர். இவரது மனைவி சியாமளா(63). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சியாமளாவுக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மூத்த குடிமக்கள் யாரும் வங்கிக்கு வராமல் இருக்கும் விதமாக அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வீட்டிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வங்கி நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்திருப்பதாக கூறி சியாமளாவின் வங்கி கணக்கு தகவல்கள் அனைத்தையும் பெற்றுள்ளார். பின்னர் சியாமளாவின் செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணையும் கேட்டுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்ததால் சியாமளாவும் வங்கி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 9 முறை அடுத்தடுத்து பணம் குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள திமுக பிரமுகர் விநாயகமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சியாமளாவின் ஏடிஎம் கார்டு எண்ணை பிளாக் செய்துள்ளார். இதில் வங்கி கணக்கில் இருந்த 8 லட்சத்து 65 ஆயிரத்து 444 ரூபாயில், ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 638 ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது தெரியவந்தது. வங்கி கணக்கை உடனடியாக பிளாக் செய்ததால் மீதமுள்ள பணம் தப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சியாமளா சிட்லபாக்கம் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடுகின்றனர்.

Tags : abduction ,bank ,Marma Asami ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு