×

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

துறையூர், பிப். 17: துறையூர் அடுத்த தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (40). இவர் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி துறையூரில் பாலாஜி அவென்யூவை சேர்ந்த பிரபாகரன் (57) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒன்றரை பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமார், அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்நிலையில் திருச்சி எஸ்பி பரிந்துரையின்பேரில் அசோக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.

மனைவி புகாரில் கணவர் கைது: துறையூரை சேர்ந்தவர் ராமசந்திரன் (40). இவரது முதல் மனைவி வித்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராமச்சந்திரன் 2வதாக திருமணம் செய்து அந்த பெண்ணுடன் வசித்து வருகிறார். இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகளை கணவருடன் விட்டு விட்டு தாய் வீடான மண்ணச்சநல்லூர் திருவரங்கபட்டியில் வித்யா வசித்து வருகிறார். இதைதொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் கணவருடன் உள்ள மகளுடன் போனில் அடிக்கடி வித்யா பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன், நேற்று துணிக்கடைக்கு சென்று மனைவி மற்றும் கடை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி தற்கொலை: துறையூர் அருகே கோட்டப்பாளையம் கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மின்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் புனிதா (21). இவர் எருமப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி புனிதா தீ வைத்து கொண்டார். இதையடுத்து உடல் கருகி இறந்தார். உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வியாபாரி தற்கொலை: திருச்சி- கரூர் பைபாஸ் ரோடு வி.என்.நகரை சேர்ந்த பருப்பு வியாபாரி சேகர் (60). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சேகர் திடீரென மாயமானார். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சேகர் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதற்கிடையில் மாயமான சேகர் அன்று மாலை வீடு திரும்பினார். இதையடுத்து வீட்டில் இருந்த சேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபருக்கு கத்திக்குத்து: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வெற்றிவேல் (27). தற்போது திருச்சி குழுமணி பகுதியில் வசித்து வருவதுடன் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி குழுமணியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து உறையூர் பஸ்சில் ஏறி வந்தார். உறையூர் பஸ் நிறுத்தம் வந்ததும் அவர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அங்கு நின்று வாலிபர், வெற்றிவேலை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...