×

திருச்சியில் இருந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சை செல்லும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை நெரிசல்

திருவெறும்பூர், பிப். 17:  திருச்சியில் இருந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சை செல்லும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை நெரிசல் மிகுந்த சாலையாகும். இதை தவிர்க்க பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ தூரத்துக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சர்வீஸ் சாலை கூட்டமைப்பு அமைத்து 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கான பணியை அரசு துவங்கியபோது இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். தற்போது வழக்கு முடிந்த நிலையில் சர்வீஸ் சாலை பணியை அரசு துவங்கியது. இங்கு சர்வீஸ் சாலை அமைந்தால் கடைகள், கட்டிடங்கள் இடிக்கப்படும். எனவே கடைக்காரர்கள், வணிகர்கள் ஒருங்கிணைந்து சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காட்டூர் கடைவீதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் வணிகர்கள், மக்கள் கருப்பு கொடி ஏந்தியும், கடைகளில் கருப்புக்கொடி கட்டியும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாரப்பன், ரகுநாதன், டாக்டர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து கோவிந்தராஜுலு கூறுகையில், சாலை விரிவாக்கம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை நிரந்தர தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். எங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வரும் 23ம் தேதி மாபெரும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆதரவு இல்லாத கட்சியை எதிர்ப்போம். ஒரு லட்சம் வணிகர்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைக்காது. தேவைப்பட்டால் களத்தில் குதிப்போம் என்றார்.

Tags : Trichy ,National Highway ,Thiruverumbur ,Tanjore ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!