100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பிடிஓவிடம் மனு

மன்னார்குடி, பிப். 17: ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் ராஜாங்கம், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கொரோனா பொது முடக்கம் காரணமாக கிராமப்புறங்களில் நிலவி வரும் வேலையின்மையை போக்கும் வகையில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200ஆக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும். இதில், குடும்பத்தில் வேலை செய்யும் தகுதியுடைய அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். குறிப்பாக இந்த திட்டத்தை நகர பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரம் தோறும் நிலுவை வைக்காமல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: