திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர் புகார் எதிரொலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆய்வு

திருவாரூர், பிப்.17: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தொடர் புகாரினையடுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அரசு கொள்முதல் நிலையங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏஜென்ட்கள் மூலம் கொண்டு வரப்படும் நெல்லுக்கு முக்கியத்துவம் அளித்து கையூட்டு பெற்றுக்கொண்டு கொள்முதல் நிலைய ஊழியர்கள் அந்த நெல்லை கொள்முதல் செய்வதுடன் உண்மையான விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்கு மறுத்து வருவதாகவும் விவசாயிகள் தொடர் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் திருவாரூர் இலவங்கார்குடி பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்டாலின் என்பவர் தான் விளைவித்த நெல்லை தொடர்ந்து 3 நாட்கள் வரையில் அங்குள்ள கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் அந்த நெல் கொள்முதல் செய்யப்படாததால் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பாக நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரது நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுபோன்ற தொடர்பு காரணமாக நேற்று கலெக்டர் சாந்தா மாவட்டம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார். அதன்படி திருவாரூர் அருகே நாரணமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து அங்குள்ள பதிவேடு, சாக்குகள் இருப்பு போன்றவற்றினை பார்வையிட்டார். மேலும் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாடு, எடை இயந்திரத்தின் செயல்பாடு, நெல் தூற்றும் இயந்திரத்தின் செயல்பாடு போன்றவற்றினை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது, மாவட்டத்தில் 480 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதுவரையில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 307 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 14 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இதுவரையில் 65 ஆயிரத்து 912 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.546 கோடியே 20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையங்களில் புகார் ஏதும் வராத வகையில் கண்காணித்திட முதுநிலை மண்டல மேலாளர், டிஆர்ஓ மற்றும் சம்மந்தப்பட்ட தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>