×

கலெக்டர் அதிரடி போக்குவரத்து நெரிசலை குறைக்க எடை மேடையிலிருந்து ரயில்வே நடைமேடைக்கு புதிய சாலை நீடாமங்கலம் வர்த்தகர்கள் வலியுறுத்தல்

நீடாமங்கலம், பிப்.17: நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் வெங்கிட், துணைச்செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீடாமங்கலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை சரி செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. நீடாமங்கலத்திலிருந்து நெல் அரவைக்கு மூட்டைகள் பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. இதனால் அங்கு நிற்கும் பல நூறு லாரிகளால் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் வர்த்தகர்களும் கூட்ட நெரிசலில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள எடைமேடைக்கு நேராக சென்று திரும்பி அதே வழியில் ரயில்வே நடைமேடைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. நெல் ஏற்றி வரும் லாரிகள் எடை மேடையில் இருந்து நேராக வர ரயில்வே நடைமேடைக்கும் எடைமேடைக்கும் இடையில் இருக்கும் தடுப்புகளை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்தால் நீடாமங்கலத்தில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். எனவே நீடாமங்கலம் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி எடை மேடையிலிருந்து ரயில்வே நடை மேடைக்கு புதிய சாலை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

Tags : Needamangalam Traders ,Collector Action New Road ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...