தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, பிப்.17: தஞ்சையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் பாத்திமா நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் தனியார் மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேலைகள் முடிந்து திறப்பதாக இருந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மதுபான கடை முன் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சை தாசில்தார் பாலசுப்பிரமணியன் , டாஸ்மாக் தாசில்தார் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுபான பார் திறந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே மதுபான பார் திறக்க கடாது என பொதுமக்கள் கூறினர். உங்கள் கோரிக்கை குறித்து வரும் 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். இப்போது கலைந்து செல்லுங்கள் என தாசில்தார்கள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழ்செல்வி, அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

Related Stories:

>