மீனவர் குடியிருப்பு பகுதி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

அதிராம்பட்டினம்,பிப்.17: அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித் தெரு மற்றும் தரகர் தெரு ஆகிய பகுதிகள் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகும். இதில் காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு ஆகிய பகுதிகள் ரயில்வே சாலையை ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் தாழ்வான பகுதியாகும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரயில்வே சாலையை தாண்டி செல்ல வேண்டும் என்பதால் மீனவர்கள் தங்கள் சுமைகளை தூக்கி கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்க இயலாது. மேலும் மழை காலங்களில் மழை தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாமல் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டு விடும். இந்நிலையை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைத்தது, இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் செல்லும் அளவுக்கு 10 அடி அகலம் கொண்ட பாதையாக அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த தரைப் பாலத்துக்கு அடியில் சுமார் 3 அடி உயரம் மழைநீர் வெளியேற வாய்ப்பில்லாமல் பல மாதமாக தேங்கி கிடக்கிறது. இதில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் விஷ பாம்புகளும், விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால் மீனவர் குடியிருப்பு பகுதியில் மீனவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே மீனவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>