×

காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து வங்கி முன் மா.கம்யூவினர் காத்திருப்பு போராட்டம்

குளித்தலை, பிப்.17: குளித்தலை அருகே சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த சாரதாம்பாள் என்பவர் 100 நாள் வேலை திட்ட பயனாளி ஆவார். இவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது. அவர் குளித்தலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடங்கி வரவு, செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகையை 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்காமல் வங்கி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. உடனடியாக அந்த குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க கோரி கடந்த 2.12.2020 அன்று போராட்டம் என அறிவிக்கப்பட்டு வங்கி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் உரிய காப்பீட்டு தொகையை தருகிறோம் என்று ஒப்புக்கொண்டது. ஆனால், இரண்டு மாதம் ஆகியும் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் என அறிவித்திருந்தனர்.

அதன்படி ஒன்றிய குழு நிர்வாகி கன்னியம்மாள் தலைமையில் ஏராளமானோர் நேற்று காலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி சசிதர், தாசில்தார் முரளிதரன், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வங்கி கிளை மேலாளர் துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரி முன்னுக்குப் பின்னாக பதில் அளித்ததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முடிவு தெரியும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி அமர்ந்துவிட்டனர். அதன் பிறகு மீண்டும் உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு 20 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நபருக்கு காப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசிலதார் முரளிதரனுக்கு வங்கிக் கிளை மேலாளர் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Maoists ,bank ,
× RELATED ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!