தோகைமலை அருகே பெரியகாண்டியம்மன், கன்னிமார்அம்மன் கோயில் மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி அடிப்படை வசதிகள் வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை

தோகைமலை, பிப்.17: தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் உள்ள ஆதிபரந்தாடியில் பெரியக்காண்டியம்மன் மற்றும் கன்னிமார்அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு வரும் மார்ச் 11ம் தேதியன்று மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் அன்றிரவு 4 கால பூஜையும், அதிகாலை பொன்னர், சங்கர், மாயவர், தங்காள், வீரபாகு சாம்புகன் ஆகிய சாமிகளுக்கு படுகளம் போட்டு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு பொன்னர் சங்கர் படுகளம் விழும் பூசாரியாக சங்ககவுண்டன்பட்டியில் இருந்தும், இதற்கு புலம்பல் பூசாரியாக அழகனாம்பட்டியில் இருந்தும் கலந்துகொள்வர். இதேபோல் வீரபாகு சாம்புகன் படுகளத்திற்கு பூசாரியாக பாதிரிபட்டியில் இருந்தும், புலம்பல் பூசாரியாக சிவாயம் ஆதனூர் பகுதியில் இருந்தும் பங்கேற்பர். இதில் வீரபாகுசாம்புகனுக்கு கோடி போடுதல் நிகழ்ச்சிக்கு நாகனூர் காலனியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

மேலும் அன்றிரவு திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெரியக்காண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வர உள்ளனர்.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, கழிப்பிட வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இக்கோயில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் வரும் மகா சிவராத்திரி உற்சவம் அன்று பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: