×

5 பெண்கள் பலி 26 பேர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி விவசாய வேலைக்குச் சென்றபோது பரிதாபம்

ஓட்டப்பிடாரம், பிப். 17: மணியாச்சி அருகே தறிகெட்டு ஓடிய லோடு ஆட்டோ ஓடையில் கவிழ்ந்ததில் கர்ப்பிணி உள்பட 5 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 26 பேர் நெல்லை, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அடுத்த மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு கிராமங்களைச் சேர்ந்த விவசாய பெண் தொழிலாளர்கள்  31 பேர், நேற்று காலை தங்கள் கிராமங்களில் இருந்து ஒரு லோடு ஆட்டோவில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, புதியம்புத்தூர், சவரி மங்கலம் பகுதிகளில்  நடைபெறும் உளுந்து பறிக்கும் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். லோடு ஆட்டோவை திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை (55) என்பவர் ஓட்டினார்.  சீவலப்பேரியில் இருந்து ஓட்டப்பிடாரம் வரும் சாலையில் மணியாச்சி காவல்நிலையத்துக்கு முன்பாக சுமார் 200 மீட்டர் மேற்கில் உள்ள ‘எஸ்’  போன்ற வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையோரம் இருந்த பாலத்தின் ஓடையில் சறுக்கியபடி தலைகீழாக  கவிழ்ந்தது. ஓடையில் 2 அடிக்கு மேலான அளவு தண்ணீர் தேங்கிக்கிடந்த நிலையில்  லோடு ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதனால் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியும், கால்வாய் தண்ணீரில் மூழ்கிய படியும் அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் மணப்படை வீடு அம்பேத்கர் நகரை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள் (30), சுடலை மனைவி ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலையழகு (48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54), வேலு மனைவி கோமதி (65) ஆகியோர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஈஸ்வரி கர்ப்பிணி எனக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர், எம்எல்ஏ சண்முகையா மற்றும் முன்னாள் எம்எல்ஏ மோகன், மணியாச்சி உட்கோட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (65), செல்லத்தாய் (60),  மாரியம்மாள் (50), லிங்கம்மாள் (35), பேச்சியம்மாள் (30), விஜி (36)  உள்ளிட்ட 21 பேரை மீட்டு பல்வேறு ஆம்புலன்ஸ்களில் நெல்லை, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மணியாச்சி போலீசார், விபத்து ஏற்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு அதை ஓட்டிவந்த டிரைவரான சித்திரையை (55) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை சண்முகையா எம்எல்ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.


Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...