×

அரசின் தடை கேள்விக்குறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாயல்குடி, பிப்.17: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக கடைகளில் பயன்பாட்டிலுள்ள 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  வருவாய்துறை, உள்ளாட்சிதுறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்தாண்டு மட்டும் விறுவிறுப்பாக நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் வந்து விட்டது. ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சி பகுதிகள், முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் மற்றும் கடலாடி, நரிப்பையூர் போன்ற ஊராக பகுதிகள்,  திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, திருவாடானை போன்ற கோயில் சுற்றுலா தலம் உள்ள பகுதிகளில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

  தின்பண்டம், உணவு பொருட்கள் கடைகள், மீன், இறைச்சி கடைகள், பூக்கடை போன்றவற்றில் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வழங்கி வருகின்றனர். டீ கடை மற்றும் ஓட்டல்களில் தடைசெய்யப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் இலைகளை கடைக்காரர்கள் பயன்படுத்தி வருவதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. மேலும் கிராமங்களில் நடத்தப்படுகின்ற கோயில் திருவிழாக்கள், வீட்டுவிஷேசங்கள், துக்க நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலை, பிளாஸ்டிக் கப்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...