தெருக்களில் ஓடும் கழிவுநீர் நகராட்சியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், பிப்.17: ராமநாதபுரம் தெருக்களில் ஓடும் கழிவுநீரை அகற்றக் கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு வசந்தநகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக கழிவுநீர் செல்லும்  பாதை செயல்படாததால் மோட்டர் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் வாகனம் செல்லாதபடி நகராட்சி துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நகர் பகுதி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் இதே பிரச்சனை நிலவுகிறது. இதனை கண்டித்து திமுக சார்பில் நேற்று 12வது வார்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு நகர செயலாளர் பிரவின் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் உடனே தெருக்களில் கழிவு நீரை அப்புறப்படுத்தவும் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என நகரச் செயலாளர் பிரவின் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர அவைத்தலைவர் கோகுல முருகானந்தம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெகநாதன், நகர தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் ஸ்டாலின் மற்றும் ஏராளமான பொதுமக்கள், கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories:

>