×

வனத்துறை காலியிடங்களை நிரப்ப வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை, பிப்.17: வனத்துறை காலியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வனப்பகுதிகளை, வனவிலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறைக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், வனத்துறையில் முன்களப் பணியாளர்கள்,  வனவர் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. தமிழகத்திலுள்ள 28 வனக் கோட்டங்களில் சுமார் 1,940 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வனக்கடத்தல் மற்றும் வனக்குற்றங்களை தடுப்பதிலும், வனத்தை பாதுகாப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு வனத்துறையில் காலியாகவுள்ள முன்களப் பணியாளர்கள், வனவர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் வனத்துறை செயலர்கள், முதன்மை தலைமை வனக்காவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப்.23க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Governments ,State ,Central ,Forest Department ,
× RELATED தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு...