×

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 தொகுதிகள்: கமல்ஹாசனின் ம.நீ.ம கட்சி போட்டியிடவில்லை என அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 இடங்கள், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. அதேநேரத்தில், மநீம போட்டியிடாது என்று அறிவித்த நடிகர் கமல், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்க உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை திமுக கூட்டணியில் 7 கட்சிகளுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய குழுவினருடன் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும்- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இன்று (நேற்று) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அவற்றில் 6 தனி தொகுதிகளும், 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது\\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது விசிக எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஜெ.முகம்மது ஷா நவாஸ், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதற்கிடையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘‘மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் பொழுது தேமுதிகவும் விட்டுக் கொடுக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு கூட்டணி வெற்றிகரமாக செல்ல வேண்டுமானால் மற்றவர்கள் விட்டுக்கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக்கொடுக்கும்\\” என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று மாலை சந்தித்து பேசினார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகர், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும்- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் இன்று (நேற்று) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு, தமிழ்நாட்டில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்ய்பட்டது” தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக தனது கூட்டணியில் உள்ள 9 கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, மநீம தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரத்தில், திமுக கூட்டணியை ஆதரிப்போம். தமிழகம் முழுவதும் பிரசாரமும் செய்வோம் என்று உறுதியளித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட மற்ற கட்சிகளுடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

ஓரிரு நாளில் தொகுதிகளை ஒதுக்கி, எந்தெந்த தொகுதிகள் என்பதையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி பங்கீடு குழுவுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை விரைவில் ஒதுக்கி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதை அடையாளம் காண வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கீடு
காங்கிரஸ் 28
தேமுதிக 10
விடுதலை
சிறுத்தைகள் கட்சி 8
மார்க்சிஸ்ட் 5
இந்திய கம்யூனிஸ்ட் 5
மதிமுக 4
இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் 2
மனிதநேய மக்கள் கட்சி 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2
மொத்தம் 66

* 175 தொகுதிகளில் திமுக சின்னம்
காங்கிரஸ், தேமுதிக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டும் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அக்கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறது. மற்ற 3 தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனால் சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கினாலும், அவர்களும் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதனால் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சின்னத்தில் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags : Temika ,Vizika ,Dimuka Alliance ,Kamalhasan ,M. ,Chennai ,Tamil Nadu Assembly ,Temuthiga ,Dimuka Coalition ,Vicika ,K. ,Stalin ,Maneema ,Kamal ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...