×

எருது விடும் விழாவில் 200 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா மற்றும் எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஜனவரி 15ம் தேதி துவங்கும் இந்த விழாவானது, மார்ச் இறுதி வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி கிராமத்தில் நேற்று 25ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. விழாவிற்கு பர்கூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நாகராஜ், சுவிக்கின், பாலேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெசிந்தாவில்லியம், வரட்டனப்பள்ளி முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஆரோக்கியஇருதயராஜ், திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சோமசுந்தரம், பாலேப்பள்ளி துணை தலைவர் மாரம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவினை எலத்தகிரி பங்குதந்தை மைக்கேல் ஆன்ட்ரூஸ், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக 40 ஆயிரம், மூன்றாம் பரிசாக 30 ஆயிரம், நான்காம் பரிசாக 20 ஆயிரம் என மொத்தம் 40 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் 4 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவினை காண எலத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் வந்திருந்தனர். விழாவின் போது எருது முட்டி சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : bulls ,
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்