வேலியை திருடும் கும்பல் காடு வளர்ப்பு திட்டம் கேள்விக்குறி

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்டத்தில் வன பரப்பினை அதிகரிக்க செய்யும் வகையில், மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் வலைகளால் வேலி அமைக்கப்ப்டடு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தொப்பூர் வனப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புங்கன், வேம்பு, அரசு, ஆல், செர்ரி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பாகல் அள்ளியில் இருந்து முத்தம்பட்டி வரையில் உள்ள வனச்சாலையில், சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக்கன்றுகளை ஆடு -மாடுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுற்றிலும் வலைகளுடன் கூடிய வேலி அமைக்கப்பட்டது.

ஆனால், மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், பிளாஸ்டிக் வேலிகளை சில சமூக விரோதிகள் திருடிச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், மரக்கன்றுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், வனத்துறையின் காடு வளர்ப்பு திட்டம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து, மரக்கன்றுகளையும் -வேலிகளையும் சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகல்அள்ளி, முத்தம்பட்டி, நல்லம்பள்ளி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More