துபாய்: மேற்கு ஆசியா போரில் திடீர் திருப்பமாக போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான்-அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை நடக்க இருப்பதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் அதிபர் டிரம்ப் சரணடைந்து விட்டார் என்றும் ஈரான் பதிலளித்துள்ளது. ஈரான் மீது கடந்த 24 நாட்களாக அமெரிக்கா-இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் மேற்கு ஆசியா போர் அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்தார். டிரம்பின் மிரட்டலுக்கு அஞ்சாத ஈரான் தொடர்ச்சியாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வந்தது.
தங்களின் மின் நிலையங்களை தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படும் என்றும் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் முற்றிலும் நாசமாக்கப்படும் என்றும் கூறியது. இதுமட்டுமின்றி, ஈரானின் 90 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் கார்க் தீவையும் ஹார்முஸ் ஜலசந்தியையும் கைப்பற்ற அமெரிக்கா கூடுதலாக 4,500 வீரர்களையும் எப்-35 போர் விமானங்களையும் பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைத்தது. தரைவழி தாக்குதலுக்கும் அமெரிக்கா ஆயத்தமான நிலையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘ஈரானின் கடற்கரைகள், தீவுகள் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், பாரசீக வளைகுடாவில் உள்ள அனைத்து அணுகல் வழிகளிலும் கண்ணிவெடிகள் பதிக்க வழிவகுக்கும். 1980ல் சில கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தோல்வி அடைந்ததை மறந்து விடக் கூடாது’’ என கூறியிருக்கிறது.
இந்த நிலையில், டிரம்ப் விதித்த 48 மணி நேர கெடு இன்று இரவுடன் முடிவடைவதால் அடுத்தகட்டமாக என்ன நடக்குமோ என உலக நாடுகள் அச்சமடைந்து வந்தன. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில் திடீர் திருப்பதமாக ஈரான்-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று மாலை தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் அவர், ‘‘அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 2 நாட்களாக மத்திய கிழக்கில் நிலவும் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மிகச்சிறந்த, பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாரம் முழுவதும் ஆழமான, விரிவான, ஆக்கப்பூர்வமான இந்த பேச்சுவார்த்தை தொடர இருக்கிறது. அதன் அடிப்படையில், ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகளுக்கு எதிராக அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த ஒத்திவைப்பு, தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் அடிப்படையில் அமைந்தவை’’ என கூறினார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இத்தகவலை ஈரான் மறுத்தது. டிரம்புடன் நேரடி அல்லது மறைமுக பேச்சுவார்த்தை எதுவம் நடக்கவில்லை என்றும், அவர் பின்வாங்கினார் என்றும் ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்காகவும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தான் டிரம்ப் முயற்சிப்பதாகவும் கூறி உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்வதாக டிரம்ப் கூறியதையும் எந்த சர்வதேச ஊடகங்களாலும் உறுதிபடுத்த முடியவில்லை. ஈரானின் தொடர் பதிலடிக்கு அதிபர் டிரம்ப் சரணடைந்து விட்டதாக ஈரான் அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தால் அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என்ற எச்சரிக்கைளுக்கு மத்தியில் டிரம்பின் இந்த பின்வாங்கல், உலக நாடுகளை நிம்மதி அடைய வைத்துள்ளது. அதிபர் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேலும் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக
அறிவித்துள்ளது.
