×

நடுவழியில் நிற்கும் நகர பேருந்துகள்

உடுமலை, பிப். 17 : உடுமலையிலிருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் அவ்வப்போது பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால், பேருந்துகளில் பயணிக்கும் கிராமவாசிகள் நடந்தே தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. உடுமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கட்டிட வேலை, விவசாய கூலி வேலை, பஞ்சாலை, மஞ்சி மில் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்காக உடுமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.

பெரும்பாலோனோர் காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் உடுமலை நகருக்கு வந்து பணி தேட ஆரம்பித்தால் மீண்டும் வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடுகிறது. உடுமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து வாளவாடி, தளி, கொழுமம், அணிக்கடவு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் போதே நின்றுவிடுகின்றன. செல்ஃப் எடுக்காத அந்த பேருந்துகளை நடத்துனரும் பயணிகளும் தள்ளியே செல்பி எடுக்க வைக்கின்றனர். இதற்காகவே ஓட்டுனர்கள் பேருந்தை எந்த இடத்திலும் ஆப் செய்வது இல்லை. பயணிகள் அனைவரும் இறங்கிய பின் மீண்டும் டிப்போவுக்கு பேருந்துகளை கொண்டு வரும்போது இடையில் எங்காவது நின்று விடக்கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டே பேருந்துகளை ஒட்டி வருகின்றனர்.

பயணிகளும் வீடு போய் சேரும் வரை நகரப் பேருந்துகள் எங்காவது நின்று விடக் கூடாதே என்ற பயத்துடனே பயணிக்கின்றனர். வீடு திரும்புவதற்கு 23 கிலோமீட்டர் முன்னதாகவே பேருந்துகள் பழுதாகி விட்டால் சிரமம் பார்க்காமல் அதில் பயணிப்பவர்கள் தங்களின் வீடுகளுக்கு நடை பயணத்தை தொடர்ந்து விடுன்றனர். காயலான் கடைக்கு செல்ல வேண்டிய பேருந்துகளை எல்லாம் வைத்துக்கொண்டு ஓட்டுனர்களும் நடத்துனர்களும் படும் பாடு சொல்லி மாளாது. அரசு போக்குவரத்து கழகம் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகளை சரிவர பராமரித்து இறை நில்லாமல் ஓடும் பேருந்துகள் போல இயக்கத்தை தொடர வேண்டும் என்பதே கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு