×

ஹார்முஸ் ஜலசந்தியில் வழியாக செல்லும் கப்பல்களுக்கு ரூ.16 கோடி கட்டணம் வசூல்: ஈரான் ராணுவம் கெடுபிடி

 

தெஹ்ரான்: ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அரசு சுமார் 16 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மூன்று வாரமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் வரை முடங்கியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாக செல்ல ஈரான் கடும் தடை விதித்தது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டுமே தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வந்தன. லாராக் தீவு அருகே உள்ள குறுகிய கடல் பகுதியில் ஈரான் கடற்படையினர் கப்பல்களை நேரிடையாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று ஈரான் அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு உறுப்பினர் அலாவுதீன் புரூஜெர்டி அந்த நாட்டு அரசு தொலைக்காட்சியில் பேசுகையில், ‘ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய இறையாண்மை கொள்கையை ஈரான் உருவாக்கியுள்ளது. போர் சூழலால் ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட சில குறிப்பிட்ட கப்பல்களுக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் 16 கோடி ரூபாய்) போக்குவரத்து கட்டணமாக நிர்ணயித்துள்ளோம்.

போர் என்பது அதிக செலவுகளை கொண்டது, அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். சர்வதேச அளவில் இந்த கட்டண முறைக்கு அங்கீகாரம் வழங்கப்படாத நிலையிலும், ஒரு கப்பல் ஏற்கனவே இந்த பெரும் தொகையை செலுத்தி ஈரான் கடல் பகுதி வழியாக பாதுகாப்பாக சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்த திட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 119 டாலராக உயர்ந்துள்ளது.

கத்தார் எரிவாயு மற்றும் சவுதி அரேபிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் காப்பீட்டு கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த இன்றிரவுடன் முடிகிறது. அப்படி இருக்கையில் ஈரானின் இந்த நடவடிக்கையால் கப்பல் நிறுவனங்கள் சர்வதேச தடைகளை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Tags : Strait of Hormuz ,Iran ,TEHRAN ,HORMUZ ,
× RELATED தங்கம், பணத்தை வாரி வழங்கும் இந்திய...