×

ஈரோடு சார்நிலை கருவூலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆய்வு

ஈரோடு, பிப். 17:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசந்திரன் நேற்று ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் நிலை கருவூலத்தில் உள்ள தேர்வாணைய தேர்வுக்கான உபகரண பாதுகாப்பை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தேர்வு மையங்கள், மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்களில் தேர்வு தொடர்பான அறை, தேர்வுக்கான பொருட்கள் இருப்பை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 152 வகையான துறை சார்ந்த தேர்வுகள் கடந்த 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு தேர்வாணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதைய தேர்வில் 54,161 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். 152 துறைகளில் பணி செய்யும் வல்லுனர்கள் ஒரு லட்சத்து 37,721 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஈரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேளாளர் மெட்ரிக் பள்ளி தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டு நேற்று காலை 92 பேரும், மாலை 49 பேரும் பல்வேறு துறை தேர்வுகள் எழுதினர். இவ்வாறு தினமும், பல்வேறு மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. துறை சார்ந்த தேர்வு எழுதி முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு, அவர்களது பணி வரண் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இத்தேர்வு நடத்தப்படுகிறது.    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலமாக உள்ளதால், கடந்த ஆண்டு டிச., மாதம் நடத்த வேண்டிய தேர்வு, ஒரு மாதம் தாமதமாக தற்போது நடக்கிறது. தமிழகம் முழுவதும் துறை தேர்வுகள் சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆர்.டி.ஓ.சைபுதீன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடாத போலீசார் மீது நடவடிக்கை: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஆய்வு செய்வதற்காக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 2 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். மற்றொருவர் பணியில் இல்லை. அதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் விசாரித்தபோது, அந்த போலீஸ்காரர் சொந்த வேலைக்காக வெளியில் சென்றிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்குள்ள ஒரு பதிவேட்டில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எழுதி வைத்து, ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

Tags : Erode Independent Treasury Leader ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு