×

கீழ் மருவத்தூர் ஊராட்சியில் குடிமகன்களுக்கு இலவச பாராக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் இல்லாததால் அவலம்

மதுராந்தகம்: கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாதால் குடிமகன்களில் கூடாரமாக மாறி
விட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியம் கீழ் மருவத்தூர் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கீழ் மருவத்தூர் மற்றும் இரும்புலி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.  சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இப்பள்ளிக்கு தற்போது வரை சுற்றுச்சுவர் இல்லாமல், திறந்தவெளியாகவே உள்ளது.

மிகவும் பழடைந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் ஆனது. இதனால், புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று பள்ளி கல்வித்துறை, புதிய பள்ளி கட்டிடம் கட்டியது. அதில், தற்போது வரை பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், பாழடைந்த பழைய கட்டிடத்தை இதுவரை அகற்றவில்லை. இதனால், மாணவர்கள் விளையாடும்போது, கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவித சம்பவம் ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தவேளையில், பள்ளியில் பாடங்கள் நடத்தும்போது, அப்பகுதியை சேர்ந்த ஆடு, மாடுகள் இந்த பள்ளி வளாகத்தில் நுழைந்து படுத்து கொள்வதும், முட்டி மோதி விளையாடுவதுமாக இருக்கும். இதை சர்வ சாதாரணமாக, பார்த்து கொண்டிருந்தனர். இதற்கிடையில், பள்ளியின் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி நேரம் முடிந்ததும், அங்கு சரக்குகளை வாங்கி வரும் குடிமகன்கள், இப்பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தில், அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இப்பள்ளி, இதுவரை திறக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட குடிமகன்கள், அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் மட்டுமின்றி புதிய கட்டிட வளாகத்தையும், 24 மணிநேரமும் இலவசமாக மது அருந்தும் பாராக மாற்றி கொண்டனர். இதனை, கீழ்மருவத்தூர் கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர் கண்டித்தால், அவர்களுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

விரைவில் பள்ளி திறக்க உள்ள நிலையில், மேற்கண்ட பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, குடிமகன்களும், ஆடு, மாடுகள் நுழையாமல் தடுக்க வேண்டும். அச்சுறுத்தலுடன் இருக்கும் பழைய கட்டிடத்தை உடனே அகற்றி, அங்கு நூலகம் அல்லது மாணவர்களுக்கு தேவையான அறிவுசார் கட்டிடம் அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Government school ,bar ,citizens ,Lower Maruvathur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்