மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. இஸ்ரேல். அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இன்று (திங்கள்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1842 புள்ளிகள் சரிந்து 72,700 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
ஏற்கனவே பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தற்போது மேலும் 2.5% சரிவால் கலக்கம் அடைந்துள்ளனர். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 585 புள்ளிகள் சரிந்து 22,529 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.05 என்ற அளவுக்கு சரிந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சற்று மீண்டு 93.89ல் வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு இந்த சரிவு தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
