கோயில் நிலத்தில் சாலை அமைத்த பொதுமக்கள்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திருப்போரூர்: திருப்போரூரில் கோயில் நிலத்தில் பொதுமக்கள் சாலை அமைத்தனர். இதனை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெரு உள்ளது. இங்கு, சுமார் 150 வீடுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பை ஒட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து அரசு பள்ளிக்கு செல்ல அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் நிலத்தில் சாலை அமைத்தனர்.

இதையறிந்த திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல்முருகன் ஆகியோர் ஊழியர்களுடன் அங்கு சென்று, பொதுமக்கள் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து பொதுமக்கள், கோயில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தைகள் பள்ளி செல்வதற்கு வசதியாக சாலை அமைப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறினர். ஆனால், முறையாக அறநிலையத்துறையிடம் அனுமதி பெற மனு அளித்தால் மட்டுமே சாலை அமைக்க ஒப்புதல் அளிக்க முடியும். அதை விடுத்து இவ்வாறு அனுமதி பெறாமல் சாலை அமைத்தால், அது கோயில் நிலங்களை ஆக்கிரமிக்க வழி செய்து விடும். இதற்கு அனுமதிக்க முடியாது என்று செயல் அலுவலர் சக்திவேல் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், அமைக்கப்பட்ட சாலையை தடுக்கும் விதமாக கோயில் நிர்வாகத்தின் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மண் மேடு அமைக்கப்பட்டது.  இதையடுத்து பொதுமக்கள் முறையாக சாலை அமைக்க அறநிலையத்துறையிடம் மனு அளிப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

Related Stories:

>