வங்கி அதிகாரி போல் நடித்த ஆசாமி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு: புதிய திட்டம் என கூறி கம்மல் அபேஸ்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பம் அடுத்த அம்மாப்பேட்டை கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (75). நெசவு தொழிலாளி. இவரது மனைவி வசந்தா (65). நேற்று மதியம் தம்பதி, வீட்டில் இருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் பைக்கில் வந்தார். அவரிடம் விசாரித்தபோது, பிரபல தனியார் வங்கியில், மகளிர் சுய உதவிக்குழு பிரிவு மேலாளராக அவர் புதிதாக பெறுப்பேற்றுள்ளதாக கூறினார். பின்னர் அவர், திடீரென ஏழுமலையின் காலில்  விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, வாலிபரை எழுப்பி வாழ்த்தினாா. புதிய மேலாளராக வந்திருப்பதால் வங்கியில் பெண்களுக்கென புதிய திட்டம் அறிவித்திருப்பதாகவும், அதன்படி பெண்கள் அணிந்து இருக்கும் கம்மலின் பின்புறம் உள்ள எண்ணை பார்த்து, அந்த எண் எங்கள் வங்கி கணக்கில் இருந்தால், அவர்களுக்கு மாதம் ₹2 ஆயிரம் ஓய்வூதியம் தர உள்ளதாக தெரிவித்தார்.

இதை கேட்ட வசந்தா, தனது காதில் இருந்த அரை சவரன் கொண்ட 2 கம்மல்களை கழட்டிக் கொடுத்தார். அதில் கம்மலின் பின்புறத்தை பார்த்து இந்த எண்ணுக்கு, அந்த திட்டம் பொருந்தும் என கூறிய வாலிபர், ஏழுமலையை தன்னுடன் பைக்கில் பிள்ளையார் கோயில் வரை வரும்படி அழைத்தார். மேலும், அங்கு கிராம மக்கள் அனைவரும் வர உள்ளனர் என்றார். இதை நம்பிய ஏழுமலை, அவருடன் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்றதும், ஆதார் அட்டை கொண்டு வந்தீர்களா என ஏழுமலையிடம் கேட்ட வாலிபர், உடனே வீட்டுக்கு சென்று கொண்டு வரும்படி கூறினார்.

மேலும், முன்னால் சென்று கோயில் அருகில் காத்திருப்பவர்களுடன் பேசி கொண்டு இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஏழுமலை வீட்டிற்கு சென்று ஆதார் அட்டையுடன் கோயில் அருகே வந்தபோது, யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வங்கி அதிகாரி போல் நடித்து நகையை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஏழுமலை, காயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>