×

போக்குவரத்து நெரிசலை குறைக்க லாரிகளை புறவழிச்சாலையில் செல்ல உத்தரவிட வேண்டும்

அரவக்குறிச்சி, பிப். 16: அரவக்குறிச்சி நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க லாரிகளை புறவழிச்சாலையில் சென்று வர உத்தரவிட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டார தலைநகராகும். இங்கிருந்து சென்னை, நாகூர், ராயவேலூர், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி சுமார் 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், அரவக்குறிச்சி நகர பகுதியில் மணல் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் லாரிகள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்களும் வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது.

அரவக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்பு அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் கரடிபட்டி அருகேயுள்ள புறவழிச்சாலை வழியாகச் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து, ஒரு காவலரை நியமிக்க வேண்டும்.மேலும் முக்கியமான பிரிவு சாலைகளில் லாரிகள் நகர பகுதியில் செல்லக் கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்