×

வேதா ஆயத்த ஆடை பூங்கா முதல் கட்ட உற்பத்தி துவக்கம்

வேதாரண்யம், பிப்.16: வேதாரண்யத்தில் வேதா ஆயத்த ஆடை பூங்கா முதல்கட்ட உற்பத்தியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் வேதா ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட இருக்கிறது. இந்தநிலையில் வேதாரண்யம் குருகுலம் வளாகத்தில் நேற்று வேதா ஆயத்த ஆடை பூங்கா முதல்கட்ட உற்பத்தியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். நாகை கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் வழக்கறிஞர் நமச்சிவாயம் வரவேற்று பேசினார். குருகுலம் அறங்காவல்குழுத் தலைவர் வேதரத்தினம், திருப்பூர் தொழில் அதிபர்கள் பாலன், சண்முகசுந்தரம், முரளி, முத்துரத்தினம், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலெக்டர் பிரவீன் நாயர் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி தோல்வி குறித்து ஒப்பிட்டு ஜவுளி பூங்கா அமைந்துள்ளது குறித்து பேசினார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: நான் அரசியலில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தி மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறேன். அதையெல்லாம் விட என் வாழ்நாளில் வேதாரண்யம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைந்து அதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவது குறித்து பெருமையடைகிறேன். பெண்கள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் சொந்த காலில் யாரையும் எதிர்பார்க்காமல் செயல்பட வேண்டும். இதன்மூலம் பெண்கள் அல்லாது வேறு பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வேலையில் சீருடை அணிந்து வேலை பார்ப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியகுழு தலைவர் கமலாஅன்பழகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் பிரதன்பாபு, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜா, வெற்றிச்செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர் நன்றி கூறினார். விரைவில் ஆயக்காரன்புலம் பகுதியில் புதிய கட்டிடத்தில் 100 கோடி ரூபாயில் தொடங்கப்பட இருக்கும் வேதா ஆயத்த ஆடை பூங்காவில் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

Tags : Vedha Readymade Garment Park First Phase Production Launch ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு