×

வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகளுக்கு ஏப். 1 முதல் கட்டுப்பாடு: ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் உயரும் என்பதால் பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு அடி

புதுடெல்லி: வளைகுடா போர் காரணமாக வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக உணவுப்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களின் தலையில் மேலும் ஒரு அடி விழுவது போல் ஒன்றிய அரசின் உத்தரவின்பேரில் வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் தங்களது ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் மீது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளன. இதனால் அதன் கட்டணங்கள் உயரும் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனி ஏடிஎம் பணப்பரிமாற்ற கட்டண வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கி ஏடிஎம்களில் பெருநகரங்களில் 3 முறையும், இதர நகரங்களில் 5 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட்டு வந்தது. இதில் இருப்புச் சரிபார்ப்பு, பின் நம்பர் மாற்றம் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற பணிகளும் இலவச கணக்கிலேயே அடங்கும். இந்த வரம்பை தாண்டும்போது ஒரு பரிவர்த்தனைக்கு 21 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. எஸ்பிஐ கார்டு மூலமான கேஷ்பேக் சலுகைகள் மற்றும் இதர வங்கிகளின் தினசரி பண வரம்புகள் பழைய நடைமுறையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு தாராளமாகவே இருந்து வந்தன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதி நடைமுறைக்கு வரும் வகையில், வங்கிச் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி பல்வேறு முக்கிய வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அதன்படி எச்டிஎப்சி வங்கியில் இனிமேல் செல்போன் மூலம் மேற்கொள்ளப்படும் ‘யுபிஐ’ அடிப்படையிலான கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனைகளும், மாதந்திர 5 இலவச பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும். இந்த வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் 23 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி கட்டணமும் வசூலிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிளாட்டினம் மற்றும் என்சிஎம்சி கார்டுகளுக்கான தினசரி ஏடிஎம் பண வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசா சிக்னேச்சர் மற்றும் மாஸ்டர்கார்டு பிசினஸ் போன்ற பிரீமியம் கார்டுகளுக்கான வரம்பு 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பந்தன் வங்கியில் இலவச வரம்பைத் தாண்டிய பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி சார்ந்த பரிவர்த்தனைக்கும் 23 ரூபாயும், நிதி சாராத பணிகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும். குறிப்பாக, கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால், 25 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு மூலம் கிடைக்கும் அதிகபட்ச கேஷ்பேக் தொகை ஒரு சுழற்சிக்கு 5,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 4,000 புள்ளிகளின் மடங்குகளில் மட்டுமே இனிமேல் சலுகைகளை மாற்றிக்கொள்ள முடியும். வங்கிகளின் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க உதவும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஏடிஎம் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்கவும் இந்த கட்டண உயர்வு செயல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர். இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.

வளைகுடா போர் காரணமாக வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக உணவுப்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் உத்தரவின்பேரில் ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் மீது வங்கிகள் ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் உயரும் என்பதால் பொதுமக்களின் தலையில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளது.

Tags : UPI ,New Delhi ,Gulf War ,EU ,
× RELATED சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் பறவை...