×

சர்வதேச கடல்வழிப் பாதை முடக்கத்தால் இந்தியாவில் உரத் தட்டுப்பாடு அபாயம்..? விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பாதிப்பு

புதுடெல்லி: சர்வதேச கடல்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கத்தால் நாட்டின் உர இறக்குமதி மற்றும் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல்கள் காரணமாக கடந்த பிப். 28ம் ேததி முதல் இன்றுடன் 23 நாட்களாக ஹார்முஸ் ஜலசந்திப் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதனால் கச்சா எண்ணெய் மட்டுமின்றி இந்தியாவின் உரத்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு வருவதில் ‘லாஜிஸ்டிக்ஸ்’ ரீதியாகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி நிலவரப்படி, சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டிஏபி உரத் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவை ஓமன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதேபோல், உள்நாட்டில் 80 சதவீத யூரியா உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்குத் தேவையான 86 சதவீத எல்என்ஜி எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்தே வருகிறது. தற்போது இந்தப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது ஏற்றுமதியில் ‘போர்ஸ் மெஜூர்’ (கட்டுப்பாடற்ற சூழல்) நிலையை அறிவித்துள்ளது.

இதனால் மொராக்கோ மற்றும் ரஷ்யாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள், ஆப்பிரிக்காவின் ‘கேப் ஆப் குட் ஹோப்’ வழியாகச் சுற்றி வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது போக்குவரத்து செலவையும், நேரத்தையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் இந்தியாவிடம் போதிய கையிருப்பு இருப்பதால் உடனடி உரத் தட்டுப்பாடு வராது. இருப்பினும், வரும் கோடைகால சாகுபடி சீசனுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நீண்டகால திட்டம் ஒன்றை வகுக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, ஒன்றிய அரசு சுமார் 18.01 மில்லியன் டன் உரத்தை இருப்பு வைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 36.6 சதவீதம் அதிகமாகும். மே மாதம் பாதியளவு வரை இந்த இருப்பு போதுமானதாக இருக்கும் என்றாலும், அதற்குள் போர் பதற்றம் தணியாவிட்டால் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

Tags : India ,New Delhi ,US ,Israel ,Iran ,
× RELATED எரிசக்தி, உரங்கள், மின்சாரம்...