விழுப்புரம்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் வெட்டிக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்தை சேர்ந்தவர் கலியபிள்ளை மகன் கோவிந்தன் (42), டிரைவர். இவரது மனைவி ரேணுகா (36). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் கோவிந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ரேணுகா திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து கோவிந்தனுடன் வாழ விருப்பமில்லை எனக்கூறி, அதே கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இருந்தபோதிலும் கோவிந்தன் தனது மனைவி மீது கோபத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரேணுகா நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்கு தனியாக சென்றாராம். அப்போது அங்கு மறைந்திருந்த கோவிந்தன் அவரை வழிமறித்து கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேணுகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் கோவிந்தன் தப்பியோடி விட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரேணுகாவை மீட்டு திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரேணுகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்த அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியில் மறைந்திருந்த கோவிந்தனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
