×

பொய் புகார் என காவல்நிலையம் முன் குழந்தையுடன் மனைவி தர்ணா

ஜெயங்கொண்டம், பிப்.16: ஜெயங்கொண்டத்தில் கணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முன் குழந்தையுடன் அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கலைமணி(26). இவரது கணவர் கிங்ஸ்லின் தேவகுமார். இவர் வன்கொடுமை செய்ததாக கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிங்ஸ்லின் தேவகுமாரின் மனைவி கலைமணி நேற்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், தனது குழந்தையுடன் கணவனை விடுவிக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், தனது கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட அடிதடி தகராறு காரணமாக ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் நாங்கள் கொடுத்த புகாருக்கு போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எனது கணவர் மீது கொடுத்த புகாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முயற்சி செய்கின்றனர் என்றார்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் எஸ்ஐ வசந்த் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து அவரை சமாதானப்படுத்தினார். கணவனை மீட்டுத் தரக் கோரி மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tarna ,police station ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...