×

ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்

திருவள்ளூர்: ஓடிசாவில் இருந்து ஆந்திரா கொண்டுவந்து பின்னர் தமிழ்நாட்டுக்கு லாரியில் கஞ்சா கடத்திவந்து சென்னையில் கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் ஆந்திரா வழியாக கொண்டுவந்த பின்னர் லாரிகள் மூலம் தமிழகத்துக்கு முந்திரி கழிவுகள் லோடுடன் கஞ்சா கடத்திவரப்படுவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை வழியாக முந்திரி கழிவுகள் லோடு ஏற்றி வந்த லாரியை மாவட்ட போலீஸ் எஸ்பி.விவேகானந்த சுக்லா உத்தரவின்படி, டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாபதி தலைமையில் போலீசார் திருவள்ளூர் அடுத்த கண்ணூர், புதுப்பேட்டை பகுதியில் லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.

இதில், முந்திரி கழிவுகளுடன் 35 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்திவந்த 5 பேரை பிடித்து மப்பேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் (28), பாண்டியன் (26), லோகேஷ் (30), டோனி கௌதம் (32), மதேஷ் (26), அஜித்குமார் (25) என்பது தெரிந்தது. பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் முந்திரிக் கழிவுகள் லோடு ஏற்றி வந்த லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் கஞ்சாவை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து கஞ்சாவை பிரித்து பின்னர் தனித்தனி வாகனங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர் என்பது தெரிந்தது.

Tags : Odisha ,Tamil Nadu ,Thiruvallur ,Andhra ,Chennai ,
× RELATED நடத்தை சந்தேகத்தால் இளம்பெண் படுகொலை: கணவன் வெறிச்செயல்