×

நூறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் புதுகை கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை, பிப்.16: தேசிய வேலை உறுதித்திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாடுமுழுவதும் தேசிய வேலை உறுதித்திட்டத்தில் வேலைசெய்யும் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான நிதி கடந்த ஆண்டைவிட ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே, தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சிக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நாடுமுழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மேலும், புதுக்கோட்டை மாவட்ட சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சரவணனிடம் இக்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Innovation Collector ,
× RELATED புதுகை கலெக்டர் தகவல் விவசாயிகள்...