வேலைவாய்ப்பு அலுவலகம் முன் வைக்கப்பட்ட நூதன பதாகை புதுக்கோட்டையில் வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை, பிப.16: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு மூப்பை புதுப்பித்தும் இதுநாள்வரை நலம் விசாரித்து கூட கடிதம் வரவில்லை என்று கூறி வேலையில்லா திண்டாட்டத்தை உணர்த்தும் வகையில் இளைஞர் ஒருவர் விளம்பர பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை கிடைத்துவிடும் என்று படித்த இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஆனால் இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே தந்து வருகின்றது. மேலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இருக்கும் கொஞ்ச வேலையையும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தட்டிப் பறித்து சென்று விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சில இளைஞர்கள் பட்டயப் படிப்பு படித்துவிட்டு துப்புரவு பணியாளர் வேலையாவது கிடைக்குமா என எதிர்பார்த்து விட்டு கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு டெம்போ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், ஆனால் இதுநாள் வரை வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து இதுவரை நலம் விசாரித்து கூட கடிதமும் வந்ததில்லை என்று கூறி ஆனந்தராஜின் வேலைவாய்ப்பு பதிவு எண், தொடர்புக்கு அலைபேசி எண்ணையும் அச்சிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவரது நண்பர்கள் சார்பில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு ஐடிஐ அருகே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பதாகை வைத்துள்ளனர். இந்தப் பதாகை புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இந்த பதாகையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர் தற்போது இது வைரலாகி வருகிறது. இதனையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் வாசலிலிருந்த பதாகையை அப்புறப்படுத்தினர்.

Related Stories:

>