×

சுடுகாடு அமைத்து தர வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

தஞ்சை, பிப்.16: பூதலூரில் சாலை வசதி உள்ள இடத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கிராமமக்கள் மனு அளித்துள்ளனர். பூதலூர் அருகே கோவில்பத்து வருவாய் கிராமம் கெங்கை சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாகரன் மற்றும் கிராம மக்கள் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், 24 கோவில் பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கெங்கை சமுத்திரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். சுமார் 70 ஆண்டுகளாக கல்லணை கால்வாய் மூலம் நீர் வசதி பெற்ற வயல்வெளியில் உள்ள சுடுகாட்டிற்கு நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தி கொண்டு சேற்றில் நடந்து இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்கிறோம். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வயலில் பயிர்களின் நடுவே இறந்தவர்கள் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை தொடர்ந்து வருகிறது. எனவே கோவில்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பூதலூர்- தஞ்சை சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடமாகவும், எங்கள் கிராமத்திற்கு எளிதில் சென்றடைய கூடிய வகையிலும் இடம் உள்ளது. எனவே இவ்விடத்தை தாங்கள் நேரில் ஆய்வு செய்து எங்களது நீண்ட கால பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதை பட்டா நிலங்கள் என்பதால் யாரும் இடம் தர முன்வரவில்லை. இன்றைய கால சூழ்நிலையில் பிரேத வண்டிகள், வாகனங்கள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. எனவே பூதலூர்- தஞ்சை சாலையருகே அரசு நிலத்தில் சுமார் 5 சென்ட் நிலம் கொடுத்தால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Collector ,crematorium ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...