×

கோட்டூர் அருகே போலி சிட்டா, அடங்கல் தயாரித்து ரூ.20 லட்சம் மோசடி

மன்னார்குடி, பிப்.16: காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 80 சதவீதத்திற்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து அழுகிவிட்டது. இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாட்டார் ஊராட்சியில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 411 பயனாளிகள் கொண்ட பட்டியல் விஏஓ மூலம் தயார் செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த தொகையில் குறைந்த அளவே வழங்கிவிட்டு சிலருக்கு மட்டும் சலுகை காட்டப்பட்டு அதிக தொகை வழங்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பயனாளிகள் பட்டியலில் 17 விவசாயிகள் பேர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், வாட்டார் விஏஓ வீரசேகரன் என்பவர் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரில் போலியாக சிட்டா, அடங்கல் தயாரித்து அதன் மூலம் ரூ.20 லட்சம் வரை முறைகேடுகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆதாரங்களுடன் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட வாட்டார் விஏஓ வீரசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கீதா, தங்கமணி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், முதல்வர் தனிப்பிரிவு, திருவாரூர் கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் கூடிய புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். இது குறித்து வாட்டார் வறட்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நாங்கள் பாதிக்கப்பட்டுளோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கேட்டோம். ஆனால், அரசோ ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவதாக கூறியது. இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும் அரசு அறிவித்த குறைந்த அளவிலான தொகையாவது கிடைக்கும் என நம்பியிருந்தோம். அதில் மண்ணை அள்ளிப்போடுவது போல் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. இது குறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் மனுக்கள் அளித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என வேதனையுடன் கூறினர்.

Tags : Kottur ,
× RELATED 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளை...