×

கட்டிய விவசாய கடனை திருப்பி தரக்கோரி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள் தென்தாமரைகுளத்தில் பரபரப்பு

தென்தாமரைகுளம், பிப். 16: விவசாய கடனை செலுத்தியர்களுக்கு அதனை திருப்பி தரக்கோரி தென்தாமரைகுளம் வேளாண்மை  கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர்.
குமரிமாவட்டம் தென்தாமரைகுளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுற்றுப்பகுதி கிராமங்களான ஆண்டிவிளை, தென்தாமரைகுளம், விஜயநகரி, தேரிவிளை, காட்டுவிளை, குமாரபெருமாள்விளை  உட்பட பல பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  தென்தாமரைகுளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயக் கடன் பெற்றுள்ளனர். பின்னர் அந்தக் கடன்களை குறிப்பிட்ட நாட்களுக்குள்  கட்டி முடித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் கடந்த வருடம் மார்ச் 1 ம் தேதி முதல் இந்த வருடம் ஜனவரி 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதனால் விவசாயக் கடனை கட்டி முடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை தென்தாமரைகுளம் சுற்றுப்பகுதியில் உள்ள பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தென்தாமரைகுளம் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் முன்பு கூடினர். பின்னர் நாங்கள் கட்டிய விவசாய கடன் தொகையை திருப்பி தாருங்கள் என்று கோஷமிட்டனர். தகவலறிந்த கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தென்தாமரைகுளம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, கடந்த வருடங்களில் நாங்கள் கடன் தொகையை கட்டி முடித்து 10 நாட்களுக்குள் புது கடன் தருவார்கள். ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து கடனை வசூலித்து மூன்று மாதங்கள் ஆகியும் புதிதாக கடன் தரவில்லை. முறைப்படி எங்களுக்கு கடன் தந்திருந்தால்  எங்கள் கடனும் தள்ளுபடி ஆகியிருக்கும். எனவே நாங்கள் கட்டி முடித்த கடன் தொகையை எங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் வலிய பெருமாள் அரசு மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. உங்களது கோரிக்கைகளை எழுத்து மூலமாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரிசீலனைக்கு அனுப்புகிறோம் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து அங்கு கூடி நின்ற பெண்கள் கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் தென்தாமரைகுளம் பகுதியில் மூன்று மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Women ,
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்