வி.கே.புரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா அசனவிருந்து

வி.கே.புரம், பிப்.16: வி.கே.புரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா அசனவிருந்து நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். வி.கே.புரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா பிப்.5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களும் தினமும் மாலையில் திருப்பலியும் மறையுரையும் நடந்தது. முக்கிய திருவிழாவான 8ம் திருவிழாவான 12ம்தேதி மூன்றுவிளக்கு சூசையப்பர் ஆலயத்திலிருந்து அன்னை மரியாள் தேர் பவனி இருதயகுளம் பங்குதந்தை சைமன் செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார். ஊர்வலமாக இருதயகுளம் லூர்து அன்னை கெபி வரை நடந்தது.9ம் திருவிழாவான 13ம்தேதி மாலை திருஇருதய உயர்நிலைப்பள்ளியிலிருந்து நற்கருணை பவனி நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று முன்தினம் (14ம்தேதி) அதிகாலை சிறப்பு திருப்பலியும் புதுநன்மை வழங்கும் விழாவும் நடந்தது. இதில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சவரிமுத்து பங்கேற்றார். மாலையில் கொடி இறக்கமும், நன்றி திருப்பலியும் நடந்தது.

தொடர்ந்து அசனவிருந்தை முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா தொடங்கி வைத்தார். திருவிழா நிறைவு பெற்றதையடுத்து கொடி இறக்கப்பட்டது. இதில் விழாக்குழுவினர் பாஸ்கர்பால், பாப்பையா, நேவிராஜ், அடையக்கருங்குளம் அன்னை ஜோதி சேவா நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், செல்வகுமார் மற்றும்  ஞானமலையப்பன், மரியபீட்டர் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை இருதயகுளம் பங்குதந்தை சைமன்செல்வன், பங்கு இறைமக்கள், சேசு சபை துறவிகள், அமலவை அருட்சகோதரிகள், திருஇருதய அருட் சகோதரர்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர்  செய்திருந்தனர்.

Related Stories:

>