தென் கொரியா : தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் கொரியாவில் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தொழிற்சாலையில் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், அவர்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 59 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மாயமான 4 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
