×

வைகுண்டம் தாமிரபரணி கரையோரம் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரகேடு

வைகுண்டம், பிப்.16: வைகுண்டம் பேரூராட்சி பகுதியில் உள்ள 18-வார்டு பகுதிகளிலிருந்தும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 30 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுத்திடும் வகையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017ம் ஆண்டு வைகுண்டம் அருகே உள்ள நத்தம் பகுதியில் வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் கொட்டப்பட்டன.அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மண்புழு உரம்  தயாரிக்கப்பட்டு வந்தது. ஓராண்டிற்குள் வளர்ப்பு பூங்கா எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மீண்டும் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் 18-வார்டு பகுதிகளிலிருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.மேலும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் பல்வேறு சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுகிறது. காற்றடிக்கும் திசை எங்கும் பரவும் புகையினால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புகை சென்று அங்கு உள்ள நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொது மக்களின் உயிரோடு விளையாடும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து வக்கீல் ரமேஷ் கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி அதை தீ வைத்து எரிப்பதால் வரும் புகை அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளின் அறைகளும் சுற்றி வருகிறது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிரந்தர செயல் அலுவலர் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தபோது, குப்பைகளை கொட்ட தனி இடம் ஒதுக்கப்பட்டு விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். எனினும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினமும் பேரூராட்சி பணியாளர்களே தீ வைத்து எரிப்பதினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி தேர்தல் பிரசாரத்துக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட உள்ளதாக சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...