×

குலசேகரன்பட்டினம் தர்கா கந்தூரி விழா துவக்கம்

உடன்குடி,பிப்.16: குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸயார் செய்யது சிராஜூதீன் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற இத்தர்காவில் ஆண்டுதோறும் 15நாட்கள் கந்தூரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 5மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியே பவனியாக கொண்டு வரப்பட்டது. இரவு 11மணிக்கு கொடியேற்றம், மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது. இதில் முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம், சென்னை சேப்பாக்கம் அதிமுக துணை செயலர் முகைதீன், திமுக மாவட்ட சிறுபான்மைநலபிரிவு துணை அமைப்பாளர் ஷேக்முகம்மது மற்றும் உடன்குடி, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் மார்க்க சொற்பொழிவுகள் நடக்கிறது. பிப்ரவரி 25, 26ம் தேதிகளில் அஸர் தொழுகைக்குப்பின் மவுலூது திக்ரு இஷா தொழுகைக்குப்பின் தப்ரூக் வழங்கப்படும். பிப்ரவரி 26ம் தேதி இரவு 2மணிக்கு தர்காவிலிருந்து அலங்காரத்துடன் சந்தனக்கூடு பவனி, காலை 10மணிக்கு கந்தூரிகமிட்டி சார்பில் வீடுதோறும் தப்ரூக் வழங்கப்படும். பிப்ரவரி 27ம் தேதி இரவு 3மணிக்கு ஹத்தம் தமாம் செய்து தப்ரூக் வழங்கல், 28ம்தேதி இரவு 7மணி முதல் 10மணி வரை விளக்கு ஏற்றுதல், மார்ச் 1ம்தேதி கொடி இறக்கப்பட்டு தப்ரூக் வழங்கப்படும். ஏற்பாடுகளை முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Kulasekaranpattinam Dargah Kanthuri Festival ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு