வேலூர், பிப்.16: சமையல் கேஸ் விலை திடீரென ₹50 உயர்த்தப்பட்டதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் சமையல் கேஸ் விலை ₹800ஐ தாண்டியிருப்பது நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் 27.78 கோடி பேர் வீட்டு உபயோக சமையல் கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 1 கோடி சமையல் கேஸ் நுகர்வோர்கள் உள்ளனர். கடந்த மாதம் வரை தமிழகத்தில் சென்ைன தொடங்கி கன்னியாகுமரி வரை 3 நிறுவனங்களின் சார்பிலும் ஏறத்தாழ ₹750 முதல் 780 வரை கேஸ் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது. தற்போது ₹50 விலை உயர்த்தப்பட்டிருப்பதால் கேஸ் சிலிண்டரின் விலை ₹800ஐ தாண்டி உள்ளது. இந்த விலையுடன் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுவதற்காக சர்வீஸ் சார்ஜ் எனப்படும் ₹50 உடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் ₹900ம் வரை கேஸ் ஏஜென்சிகளுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.