மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாணவ, மாணவிகள் மனு கல்லூரி படிப்ைப முடிக்க உள்ள நிலையில் உள்ளோம்

வேலூர், பிப்.16: மேல்நிலைக்கல்வியை முடித்து கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள தங்களுக்கு இன்னமும் வழங்கப்படாத மடிகணினியை வழங்க வேண்டும் என்று கேட்டு மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாணவ, மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, அனைத்து தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு, மின்இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் வேலூர் விவிகேஎம் மகளிர் பள்ளியில் கடந்த 2016-17ம் ஆண்டு மேல்நிலைக்கல்வியை முடித்த மாணவிகள், கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள தங்களுக்கு இன்னமும் மடிகணினி வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் எங்களுடன் படித்த சிலருக்கும், அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களுக்கும் மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு உடனடியாக மடிகணினி வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

அதேபோல் குடியாத்தம் பகுதி அரசு நிதியுதவி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 50 பேர் அளித்த மனுவில், தாங்கள் மேல்நிலைக்கல்வியை கடந்த 2018ம் ஆண்டு முடித்தோம். எங்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. எங்களுக்கு மடிகணினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘கொரோனா நெருக்கடி காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வில் தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் எங்கள் பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் தொடங்கி பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. 10 மாதங்களுக்கு மேல் கட்டிடத்துக்கான வாடகை, மின்கட்டணம், வாகன பராமரிப்பு உட்பட பலவற்றுக்கும் நாங்கள் வருவாயின்றி திண்டாட வேண்டியுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். விரிஞ்சிபுரம் ஜாப்ராபேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கடந்த 30 ஆண்டுகளாக ஜாப்ராபேட்டை பொன்னியம்மன், முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் குடிசைபோட்டு வாழ்ந்து வருகிறோம். இதற்கான கூரை வரியை பஞ்சாயத்துக்கு முறையாக செலுத்தி வருகிறோம். தற்போது எங்களை இங்கிருந்து காலி செய்ய சொல்கிறார்கள். எங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories:

>