×

மதுராந்தகம் அருகே குவாரியால் அடிக்கடி விபத்து: கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர்: மதுராந்தகம் அருகே நேத்தப்பாக்கத்தில் இயங்கும் தனியார்  கல்குவாரியால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், அந்த குவாரியை மூடக்கோரிகிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது. மதுராந்தகம் - சித்தாமூர் நெடுஞ்சாலையில் நேத்தப்பாக்கம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்குகிறது. அரசு அனுமதியுடன் இயங்கும் இந்த கல்குவாரி நிர்வாகம், விதிகளை மீறி அதிகளவில் பள்ளம் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும், குவாரியில் தினமும் பாறைகளை உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடியின் அதிர்வுகளால்  நேத்தம்பாக்கம், சிறுநல்லூர் கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, குவாரியில் இருந்து வெளியேறும் மண் துகள்கள் குவாரியை சுற்றியுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் படிவதால் கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதில்லை.

அதிகளவு லாரிகள் செல்வதால், சாலைகள் சேதமடைவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால், வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும் கல் குவாரியை மூடவேண்டும் என கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை  விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேத்தப்பாக்கம், சிறுநல்லூர் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை குவாரியை மூடக்கோரி மதுராந்தகம் - சித்தாமூர் நெடுஞ்சாலை நேத்தப்பாக்கத்தில் திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சித்தமூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கல்குவாரி குறித்து, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்

Tags : accident ,quarry ,Madurantakam ,road block ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...